ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடந்தது.;
டோக்கியோ,
ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால் பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த நாட்டை பொறுத்தவரை ஆளுங்கட்சி தலைவரே பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார். எனவே ஆளுங்கட்சி தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் முதன் முறையாக சனே தகைச்சி (வயது 64) என்ற பெண் வெற்றி பெற்றார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பிரதமராக அவர் பதவியேற்க இருந்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட 465 உறுப்பினர்களில் 237 பேர் தகைச்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்மூலம் நாட்டின் 104-வது மற்றும் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சனே தகைச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இரு நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்த தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.