‘பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது’ - பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் மோடி அதிரடி பேச்சு

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை வேடம் போடுவதை ஏற்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-01 11:14 IST

பீஜிங்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மரின் மூத்த ராணுவ அதிகாரி மின் ஆங் லையிங், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் டோகாயேவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே மாநாட்டிற்கு வருகை தந்த ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசி கலந்துரையாடினர்.

சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்த சூழலில், இன்று ரஷியா, இந்தியா மற்றும் சீனாவின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக இருந்த நாடுகள் குறித்தும் பேசினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் முன்னிலையிலேயே பிரதமர் மோடி இந்த கருத்துகளை முன்வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது;-

“எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடிப்படையாகும். ஆனால் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது வேரறுக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் எதிரான சவாலாகும்.

எந்த நாடும், எந்த சமூகமும், எந்த குடிமகனும் அதிலிருந்து தன்னை பாதுகாப்பாக கருதிக் கொள்ள முடியாது. எனவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளது. கூட்டுத் தகவல் நடவடிக்கை மூலம் அல்கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியா முன்முயற்சி எடுத்தது.

பயங்கரவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் நிதியை தடை செய்வதோடு, அதன் மூலங்களை கண்டறிந்து களையெடுத்து வருகிறோம். 4 தசாப்தங்களாக தீவிரவாத நடவடிக்கைகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை வேடம் போடுவதை ஏற்க முடியாது.

பயங்கரவாதத்தின் கோரமான முகத்தை பஹல்காமில் அண்மையில் இந்தியா பார்த்தது. இது இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் மட்டுமல்ல, மனிதநேயத்தை நம்பும் ஒவ்வொரு நாட்டிற்கும் எதிரான வெளிப்படையான சவால். நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்