ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் வழங்கிய பாகிஸ்தான் அரசு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது.;

Update:2025-05-07 16:42 IST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தனது ஆயுதப் படைகளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலை இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஐ.நா. சாசனத்தின் பிரிவு-51 இன் படி, அப்பாவி பாகிஸ்தானிய உயிர்களை இழந்ததற்கும் அதன் இறையாண்மையை அப்பட்டமாக மீறியதற்கும் பழிவாங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், இடத்தில் மற்றும் முறையில் தற்காப்புக்காக பதிலளிக்கும் உரிமையை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது'' என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்படும் சூழ்நிலை மற்றும் அதன் சாத்தியமான தாக்கங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடுத்தடுத்து உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்திய நிலையில், இனி நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு இந்தியாவே பொறுப்பு என பாகிஸ்தான் பாதுகாப்பு குழு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்