வெனிசுலா படகு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; தொடரும் பதற்றம்
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா.;
வாஷிங்டன்,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்படுவதாகவும், அந்த கடத்தல் கும்பல்கள் அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்து விற்பனை செய்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த கும்பல்களின் செயல்பாடுகளுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஆதரவு அளிப்பதாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேபோல், கரீபியன் கடல் வழியாக போதைப்பொருள் அமெரிக்காவுக்கு கடத்தப்படுவதாகவும் கூறி வருகிறார். இதை தடுக்க கரீபியன் கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரும் படகுகள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கவும் அவர் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போதைப்பொருள் கடத்தி வந்ததாக கடந்ததாக கடந்த சில நாட்களுக்குமுன் 2 வெனிசுலா படகுகளை அமெரிக்க கடற்படை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தி வந்ததாக வெனிசுலாவை சேர்ந்த மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படகில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். சர்வதேச கடல் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. போதைப்பொருள் கடத்தி வந்த படகை தாக்கி அழித்துவிட்டதாகவும், இந்த தாக்குதலில் அமெரிக்க கடற்படையில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலால் அமெரிக்கா, வெனிசுலா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது