2 மனைவி உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை

காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் பூரியாவின் சர்ச்சை பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-10 14:39 GMT

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக காந்திலால் பூரியா போட்டியிடுகிறார். இந்நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட சைலானாவில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய சிங், மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் பூரியா பொதுக்கூட்டத்தில் பேசும்போது,

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஒவ்வொரு பெண்கள் வங்கி கணக்கிலும் இந்த பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். இது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷமும் எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் திக் விஜய் சிங், மற்றும் ஜிது பட்வாரி முன்னிலையில் காந்திலால் பூரியா இந்த கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், காந்திலால் பூரியாவின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா எம்.பி. மாயா நரோலியா கூறும்போது, காங்கிரஸ் தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கைகள் விடுத்து வருகின்றனர். காந்திலால் பூரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்க இருக்கிறோம். அவரின் இந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில்பெண் வாக்காளர்கள் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்