2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் விராட் கோலி உண்மையிலேயே இடம்பெற்றுள்ளாரா..?
2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகின.;
image courtesy:PTI
சென்னை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில், 2025-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 10 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
அதில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியின் பெயர் இடம்பெற்றிருந்தது. விராட் கோலி, ஜோ ரூட் உள்ளிட்ட 10 வீரர்களின் பெயர் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரே இந்திய வீரர் விராட் கோலி என்பதால் சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் வேகமாக பரவின. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. தரப்பில் இருந்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் இந்த பட்டியல் போலியானது என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதன் வருடாந்திர விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி இடம்பெற்றுள்ளார் என்பது குறித்து வெளியான செய்திகள் அனைத்து தவறானவை என தெரிய வந்துள்ளது.