2-வது டெஸ்ட்: பும்ரா விளையாடுவாரா..? இல்லையா..? கேப்டன் சுப்மன் கில் பதில்
இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.;
image courtesy:BCCI
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நாளை பர்மிங்காமில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விகள் காணப்படுகின்றன.
ஏனெனில் பனிச்சுமை காரணமாக அவரால் இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த 3 போட்டிகள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று பல இந்திய முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில் பும்ரா, முகமது சிராஜ் நீங்கலாக மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் அனுபவம் இல்லை. எனவே பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்னதாக முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பெரிய அளவில் செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே அணிக்கு நம்பிக்கை அளித்தார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அவர் இல்லாமல் போனால் அது நிச்சயம் இந்திய அணிக்கு பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில்லிடம் 2-வது போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சுப்மன் கில், "ஜஸ்பிரித் பும்ரா நிச்சயமாக தயாராக இருக்கிறார். இருப்பினும் வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் அவரது பணிச்சுமையை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். இந்த வகையான பிட்சில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தவும், ரன்கள் எடுக்கவும் சரியான கூட்டணியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். அந்த வகையில் 2-வது போட்டியில் விளையாடும் அளவிற்கு பும்ரா தயாராகத்தான் இருக்கிறார். ஆனாலும் பணிச்சுமை காரணமாக அவரை விளையாட வைக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து யோசித்து வருகிறோம்.
இருப்பினும் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் சூழலை கருத்தில் கொண்டே அவரது இடம் குறித்த முடிவு உறுதியாகும். ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பது தொடருக்கு முன்பே எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் அதற்கேற்றவாறே அணியை தேர்வு செய்தோம். அவர் விளையாடவில்லை என்றால் சிறந்த பந்து வீச்சாளரை நிச்சயமாக மிஸ் செய்வீர்கள்" என்று கூறினார்.