4வது டெஸ்ட்; பும்ரா விளையாடுவாரா... இல்லையா...? - சுரேஷ் ரெய்னா கருத்து
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.;
image courtesy:PTI
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
கட்டாய வெற்றி என்ற நெருக்கடியில் இந்த போட்டியில் இந்திய அணி களம் காண உள்ளது. இந்த போட்டியில் இந்திய முன்னணி வீரரான பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரின் இரண்டு போட்டியில் விளையாடியுள்ள அவர் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே விளையாட இருக்கிறார்.
ஆனால் அது எந்த போட்டி? என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பும்ரா நான்காவது போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்த தனது கருத்தினை இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவது குறித்த முக்கிய முடிவு இந்திய அணியின் மருத்துவர்களின் கையில்தான் உள்ளது.
ஏனெனில் என்னுடைய உடம்பு பற்றி எனக்கு தெரியும். அதேபோன்று என்னுடைய மருத்துவருக்கும் தெரியும். அவர் கொடுக்கும் அறிவுரையின் படியே நான் நடந்து வருகிறேன். அந்த வகையில் அவருக்கு அவருடைய உடம்பு எவ்வாறு செயல்படுகிறது? அவரது பணிச்சுமை எவ்வளவு? என்பது நன்றாக தெரியும். அதேபோன்று மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தான் அவரும் நடந்து கொள்வார்.
அந்த வகையில் பார்க்கையில் ஏற்கனவே மிகப்பெரிய காயத்திற்கு பிறகு மீண்டு வந்துள்ள அவர் மருத்துவரின் அறிவுரைப்படி தான் போட்டியில் பங்கேற்று வருவார் என்று நம்புகிறேன். அந்த வகையில் இறுதியில் அடுத்த போட்டிக்கு முன்னதாக மருத்துவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை வைத்து தான் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது உறுதியாகும் என்று தான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.