இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: ரிஷப் பண்ட் விலகல்.. தமிழக விக்கெட் கீப்பர் அணியில் சேர்ப்பு.. பி.சி.சி.ஐ. அறிவிப்பு
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்டில் ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.;
image courtesy:BCCI
மும்பை,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இப்போதும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை.
ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.