இன்னும் 89 ரன்கள்... டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைக்க கில்லுக்கு வாய்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கும் வாய்ப்பு சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது.;
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கும் வாய்ப்பு இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு கிடைத்துள்ளது.
சுப்மன் கில் இந்த தொடரில் இதுவரை 4 சதம் உள்பட 722 ரன்கள் குவித்துள்ளார். அவர் இன்னும் 53 ரன்கள் எடுத்தால், ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து (1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் 774 ரன்) தட்டிப்பறிப்பார்.
89 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனை (1936-37-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 810 ரன்) முந்துவார். சதம் விளாசினால், ஒரு தொடரில் அதிக சதங்கள் நொறுக்கிய கேப்டன் என்ற சாதனையையும் வசப்படுத்துவார்.