துபாயில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு
போட்டியை காண வருபவர்கள் குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்துக்கு வர வேண்டும்;
துபாய்,
துபாயில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான பாதுகாப்பு விதிமுறைகளை துபாய் போலீஸ் செயல்பாட்டுத்துறை துணைத்தலைவரும், நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு கமிட்டி தலைவருமான சைப் முகைர் அல் மஸ்ரூயி வெளியிட்டார்.
துபாய் மற்றும் அபுதாபியில் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஓமன் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தான் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் வங்காளதேசம் மற்றும் இலங்கை இடையிலான போட்டி நேற்று நடந்தது.தொடர்ந்து துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனால் இரு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் போட்டியை காண அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக போலீசார் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் போட்டியை காணும் வகையில் மெட்ரோ ரெயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து துபாய் போலீஸ் அதிகாரி சைப் முகைர் அல் மஸ்ரூயி கூறியதாவது:-
கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக பட்டாசுகள், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள், லேசர் ஒளியை ஏற்படுத்தும் பொருட்கள், குடைகள், பெரிய அளவிலான கேமராக்கள், செல்பி எடுக்க பயன்படுத்தும் பொருட்கள், கூர்மையான பொருட்கள், கொடிகள், பேனர்கள், செல்லப்பிராணிகள், ரிமோட் கண்ட்ரோல் எலெக்ட்ரானிக் சாதனங்கள், ஸ்கேட்டிங் சக்கரங்கள், கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய பொருட்களை மைதானத்துக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.மைதானத்துக்கு வரும் ரசிகர்களை கண்காணிக்கும் வகையில் போலீஸ் குழுவினர் பணியில் ஈடுபடுவர். மேலும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு குறித்த மத்திய சட்டத்தின் அடிப்படையில் முறையான அனுமதி இல்லாமல் மைதானத்துக்குள் நுழைவது, பட்டாசு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வருவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், 5 ஆயிரம் திர்ஹாம் முதல் 30 ஆயிரம் திர்ஹாம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அதேபோல் வன்முறையில் ஈடுபடுவது, பொருட்களை எரிவது மற்றும் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்கு சிறைத்தண்டனையுடன் 10 ஆயிரம் திர்ஹாம் முதல் 30 ஆயிரம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் போட்டியை காண வருபவர்கள் குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்துக்கு வர வேண்டும். ஒரு டிக்கெட்டில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தாங்கள் கொண்டு வரும் டிக்கெட் சரியானது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாகனங்களை அனுமதிக்கப்பட்ட இடத்தில் முறையாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.