ஆசிய கோப்பை: பயிற்சியின்போது காயத்தில் சிக்கிய கில்.. பாக். அணிக்கு எதிராக விளையாடுவாரா..?
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.;
image courtesy:twitter/@BCCI
துபாய்,
ஆசிய கோப்பையில் இன்று நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நேற்றைய பயிற்சியின்போது இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில்லுக்கு கையில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வலியால் துடித்த அவர் உடனடியாக பயிற்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் இந்திய அணியின் பிசியோ அவரை கண்காணித்தார்.
அத்துடன் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீரும் சுப்மன் கில்லுடன் காயம் குறித்து பேசியுள்ளனர். சிறிது நேரத்திலேயே வலி குறைந்த உடன் சுப்மன் கில் மீண்டும் பயிற்சியை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் பெரிய அளவில் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என நம்பப்படுகிறது.