ஆசிய கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா..?

இந்திய அணி தற்போது துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.;

Update:2025-09-07 17:32 IST

image courtesy:PTI

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு 8 மணி) சந்திக்கிறது. பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதல் 14-ந்தேதி அரங்கேறுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் பங்கேற்கிறது. இதையொட்டி வீரர்கள் அனைவரும் கடந்த 4-ந்தேதி தனித்தனி குழுவாக துபாய் புறப்பட்டனர். இதனையடுத்து இந்திய வீரர்கள் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடருக்கான அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 2-வது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிதேஷ் ஏறக்குறைய ஒராண்டுக்குப்பின் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ஜிதேஷ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பினிஷர் ரோலில் கச்சிதமாக செயல்பட்ட அவர் விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார். இதன் காரணமாக மீண்டும் அவருக்கு இந்திய அணியில் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் - ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவுகிறது. அத்துடன் இவர்களில் யார் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்? என்ற கேள்வி காணப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் பயிற்சியில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா அதிக நேரம் செயல்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா இடம்பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் பயிற்சியில் அதிக நேரம் ஈடுபடவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் சுப்மன் கில் - அபிஷேக் சர்மாவை தொடக்க ஆட்டக்காரர்களாகவும், ஜிதேஷ் சர்மாவை விக்கெட் கீப்பராக களமிறக்க முடிவெடுத்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பது கடினம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்