ஆசிய கோப்பை: சாம்சனை அந்த வரிசையில் பேட் செய்ய களமிறக்கலாம் - இந்திய முன்னாள் வீரர்
ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா - சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என கூறப்படுகிறது.;
image courtesy:PTI
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வரும் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆன அபிஷேக் சர்மாவுக்கு இடம் உறுதி. மற்றொரு தொடக்க ஆட்டக்காராக துணை கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.
முன்னதாக டி20 கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டாக தொடக்க வரிசையில் அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி நிலவியது. ஆனால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் வழங்கப்பட்டிருப்பதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது உறுதி.
அவர் களமிறங்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. ஏனெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஏற்கனவே திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா போன்ற அதிரடியான வீரர்கள் உள்ளனர். அதுபோக 2-வது விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ள ஜிதேஷ் சர்மா பினிஷிங் ரோலில் அசத்தக்கூடியவர். எனவே சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் சஞ்சு சாம்சனை 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “என்னை பொருத்தவரை அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவர்தான் ஆசிய கோப்பை தொடருக்கான தொடக்க வீரர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் 3-வது வரிசையில் களமிறங்கும் திலக் வர்மா தற்போது இளம் வீரராக இருக்கிறார். எனவே அவர் வாய்ப்புக்காக காத்திருக்கலாம். அதில் எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. ஆனால் அந்த இடத்தில் அனுபவம் வாய்ந்த வீரரான சஞ்சு சாம்சனை களமிறக்க வேண்டும்.
3-வது இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கினால் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்குள் அந்த இடத்தினை நிலைப்படுத்திக் கொள்வார். ஐ.பி.எல். தொடரில் முதல் 10 சிக்ஸ் ஹிட்டர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் வெகு எளிதாக பந்துவீச்சாளர்களை அடித்து விளையாடக்கூடியவர். ரஷித் கான் போன்ற ஒரு பவுலரையே மிடில் ஓவரில் சிக்ஸ் அடிக்கும் திறமை கொண்ட அவருக்கு மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான இடங்களில் ஒன்றாகும். ஆனால் சாம்சன் அங்கு ஒரு தொடக்க வீரராக களமிறங்கி இரண்டு சதங்களை அடித்தார். அவர் வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சு இரண்டையும் சிறப்பாக விளையாடுகிறார், மேலும் ஐபிஎல்லில், அவர் ஒவ்வொரு ஆண்டும் 400-500 ரன்கள் எடுக்கிறார்” என்று கூறினார்.