ஆசிய கோப்பை: பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வலுக்கும் எதிர்ப்பு - ஐ.பி.எல். சேர்மன் விளக்கம்
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
புதுடெல்லி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை (14-ம் தேதி) நடைபெற உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
இருப்பினும் இந்த போட்டிக்கு இந்தியாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன். இருதரப்பு போட்டிகளைப் பற்றி பேசும்போது, நாங்கள் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். ஆனால் ஆசிய கோப்பை அல்லது ஐ.சி.சி. போன்ற டிராபி நிகழ்வுகள் இருக்கும்போது, நாங்கள் அதில் அவர்களுடன் விளையாட வேண்டி இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டும் நாம் விளையாடலாம் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலை மட்டுமே இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பின்பற்றுகிறது” என்று கூறினார்.