ஜோ ரூட் அப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை - பிரசித் கிருஷ்ணா

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்டில் பிரசித் கிருஷ்ணா - ஜோ ரூட் இடையே மோதல் ஏற்பட்டது.;

Update:2025-08-02 12:22 IST

image courtesy:PTI

லண்டன்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது 22-வது ஓவரை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் கிராவ்லி ஆட்டமிழந்தார். அடுத்த 5 பந்துகளை எதிர்கொண்ட ஜோ ரூட், முதல் 4 பந்துகளை வீணடித்த நிலையில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார்.

இந்த ஓவரின் 5-வது பந்தை வீசியதும் பிரசித் கிருஷ்ணா நேராக சென்று ஜோ ரூட்டிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது. அதற்கு ஜோ ரூட்டும் பதில் கூற லேசான வாக்குவாதம் உருவானது. இதனையடுத்து கடைசி பந்தில் பவுண்டரி அடித்ததும் ஜோ ரூட் நேராக பிரசித் கிருஷ்ணாவிடம் சென்று வாக்குவாதம் செய்தார். இருவரும் ஆக்ரோஷத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே நடுவர்கள் உள்ளே புகுந்து தடுத்து நிறுத்தினர். பொதுவாக களத்தில் பொறுமையுடன் செயல்படும் ஜோ ரூட் இந்த ஆட்டத்தில் கோபமடைந்தது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஜோ ரூட்டிடம் இருந்து இப்படி ஒரு ரியாக்சனை தான் எதிர்பார்க்கவில்லை என்று பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். அத்துடன் இது வெறும் போட்டி உணர்வின் வெளிப்பாடு மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அது ரொம்ப சின்ன விஷயம்தான். அது எங்களுக்கு இடையே உள்ள போட்டி உணர்வின் வெளிப்பாடு என்று மட்டுமே நான் நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் மைதானத்துக்கு வெளியே நல்ல நண்பர்கள். அது கொஞ்சம் கிண்டலா இருந்துச்சு, ரெண்டு பேரும் அதை ரொம்பவே ரசித்தோம்.

எங்களுடைய திட்டத்தின் ஒரு அங்கமாகும். ஆனால் ரூட் அப்படி ரியாக்சன் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விளையாட்டின் ஜாம்பவானான அவரை நானும் விரும்புகிறேன். அது கொடுக்கப்பட்ட தருணத்தில் 2 நபர்கள் தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுத்து வெற்றியாளராக வருவதற்கு முயற்சிக்கக்கூடிய விஷயம் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்