சாம்சனால் அது முடியாது என்று அர்த்தமில்லை - இந்திய பேட்டிங் பயிற்சியாளர்
ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.;
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எதிர்பார்த்தது போலவே சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதனால் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார். இந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் ஆசிய கோப்பையில் 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்குவார் என தெரிகிறது. ஏனெனில் 3-வது மற்றும் 4-வது வரிசையில் திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மாற்ற இயலாது. அதனால் சாம்சன் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவது பலரது மத்தியில் அதிருதியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அவர் மிடில் ஆர்டரில் அவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்ததில்லை.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார். அதே போல அவர் எந்த வரிசையில் களமிறங்கினாலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்வார் எனவும் கோட்டக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “பாருங்க, சஞ்சு 5 அல்லது 6வது இடத்தில் அதிகம் பேட்டிங் செய்ததில்லை. ஆனால் அதற்காக அவரால் அதைச் செய்ய முடியாது என்று அர்த்தமல்ல. அதனால், சஞ்சு எந்த வரிசையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறமையான வீரர் என்று நான் நினைக்கிறேன். எனவே, அணியின் தேவைக்கேற்ப, கேப்டனும் தலைமை பயிற்சியாளரும் முடிவு செய்வார்கள். மேலும் அவர் எந்த வரிசையில் களமிறங்கினாலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்வார்” என்று கூறினார்.