முதல் டெஸ்ட்: சாய் சுதர்சன் டக் அவுட்.. ரசிகர்கள் ஏமாற்றம்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் இன்று அறிமுகம் ஆனார்.;
லீட்ஸ்,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம் பிடித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது முதல் போட்டியாகும். மேலும் கருண் நாயர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.
இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு தண்ணி காட்டினர்.
24.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கே.எல். ராகுல் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரைடன் கார்ஸ் இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார்.
அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுக வீரரான சாய் சுதர்சன் களமிறங்கினார். ரசிகர்களின் பெருமளவு ஆதரவுக்கு மத்தியில் களமிறங்கிய அவர் 4 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதோடு உணவு இடைவேளையும் விடப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்திய அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் 42 ரன்களுடன் களத்தில் உள்ளார்.