எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும் - ரோகித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.;
Image Courtesy: @BCCI
சிட்னி,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும். இங்கு 2008-ம் ஆண்டு நான் முதல் முறையாக வந்து விளையாடிய இனிமையாக நினைவுகள் உள்ளன. நானும் விராட்கோலியும் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவோமா என்பது எங்களுக்கு தெரியாது.
என்ன சாதனைகள் படைத்தாலும், பாராட்டுகளை பெற்றாலும் எங்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இந்த தொடருக்காக நாங்கள் பெர்த் வந்த போது கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு புதிதாக தொடங்கினோம். ஆஸ்திரேலியாவில் கடினமான ஆடுகளத்தையும், தரமான பந்து வீச்சையும் எதிர்பார்க்கலாம். இங்கு விளையாடுவது ஒருபோதும் எளிதானது கிடையாது. நாங்கள் தொடரை வெல்லவில்லை.
ஆனால் நேர்மறையான விஷயங்கள் அதிகம் கிடைத்துள்ளன. இது ஒரு இளம் அணி. எனவே அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும். நான் இந்திய அணிக்குள் வந்த போது சீனியர் வீரர்கள் அதிகம் உதவினார்கள். தற்போது அந்த பணியை நாங்கள் செய்கிறோம். இளம் வீரர்களை வழிநடத்த வேண்டும். ஆட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். அடிப்படையயான விஷயங்களை செய்ய வேண்டும். நான் இங்கு விளையாடும் ஒவ்வொரு முறையும் அதனை தான் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.