ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை: வரலாற்று சாதனை படைத்த மந்தனா
13-வது மகளிர் உலகக்கோப்பை தொடரில் மந்தனா மொத்தம் 434 ரன்கள் அடித்தார்.;
image courtesy:PTI
மும்பை,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின.
மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.
இந்த தொடர் முழுவதும் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய நட்சத்திர வீராக்கனை ஸ்மிர்தி மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் திரட்டிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை வசப்படுத்தினார். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு உலகக்கோப்பையில் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் 409 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள மந்தனா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.