அவரை கேப்டனாக்குங்கள் என்று சொல்லவில்லை.. ஆனால் குறைந்தபட்சம்.. - ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை

ஆசிய கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.;

Update:2025-08-21 18:50 IST

image courtesy:PTI

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இடம்பெற்றுள்ள வேளையில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர் சமீப காலமாக தொடர்ச்சியான பார்மில் அசத்தி வருகிறார். குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபியில், இந்திய அணி பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர், ஐ.பி.எல். தொடரிலும் அசத்தினார். ஆனால் அவரை ரிசர்வ் வீரராக கூட தேர்வு செய்யாமல் விட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய டி20 அணியில் இடம்பெற ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் என்ன செய்ய வேண்டுமென அவரது தந்தை சந்தோஷ் ஐயர் வேதனை தெரிவித்துள்ளார். ஸ்ரேயாசை கேப்டனாக்காவிட்டாலும் குறைந்தபட்சம் அணியில் எடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க ஸ்ரேயாஸ் வேறு என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. டெல்லி கேப்பிடல்ஸ் முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் வரை ஐபிஎல்லில் அவர் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதுவும் ஒரு கேப்டனாக. 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இந்த ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

அதற்கு அவரை இந்திய கேப்டனாக்குங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அவரை அணியில் தேர்ந்தெடுக்கவும். அவரை எடுக்காவிட்டாலும், அவர் ஒருபோதும் எதிர்ப்பு காட்டுவதில்லை. இது மட்டுமே என்னுடைய அதிர்ஷ்டம், வேறு எதுவும் சொல்ல முடியாது என்றுதான் ஸ்ரேயாஸ் சொல்வார். அவர் எப்போதும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பார். அவர் யாரையும் குறை கூறுவதில்லை, ஆனால் உள்ளுக்குள் அவர் இயல்பாகவே ஏமாற்றமடைந்திருப்பார்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்