ஒருநாள் தொடரை வென்ற இந்தியா: கேப்டன் கே.எல்.ராகுல் கூறியது என்ன..?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.;
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 271 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், விராட் கோலி 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மகராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். விராட் கோலி தொடர் நாயகனாகவும், ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில், “முதலாவது டாஸ், அணி என்னைப் பார்த்து இவ்வளவு சிரித்ததாக நான் நினைக்கவில்லை., இந்த டாஸை வென்றததற்காக நான் பெருமைப்பட்டேன். ஆமாம், அது மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் மைதானம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். முதல் இரண்டு ஆட்டங்களில் எங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் இருந்தன.
எனவே, ஈரமான பிட்சில் பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. இது ஒரு நல்ல பிட்ச். ஆனால் நாங்கள் செய்த மிக முக்கியமான விஷயம் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் எடுத்தது. இல்லையெனில் இது 400 ரன் சேஸாக இருந்திருக்கலாம் அல்லது அணிகள் மிகவும் அதிரடியாக விளையாடியிருக்கலாம்.
பிரசித் 2-3 விக்கெட்டுகளை ஒரு கட்டத்தில் எடுத்தார். அது மிகவும் முக்கியமானது. பின்னர் குல்தீப் உள்ளே வந்து, ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் நீங்கள் வெற்றி பெற ஒரே வழி எதிரணியின் விக்கெட்டுகளை எடுப்பதுதுதான்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அவ்வாறான சூழலில் நீங்கள் போட்டிகளை வெல்ல முடியும். குயிண்டன் டி காக் எப்படி பேட்டிங் செய்தார் என்பதை பாருங்கள். அவர் அவுட் ஆன போது ஸ்கோர் 180 இருக்கும். அது ஒரு முக்கியமான விக்கெட்.
இந்தத் தொடரைப் பற்றிய மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நாங்கள் எங்கள் மன அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்த முடிந்தது, அழுத்தத்தை எவ்வாறு கையாள முடிந்தது என்பதுதான். எல்லா ஆட்டங்களிலும், தென் ஆப்பிரிக்காவின் பேட்டர்கள் எங்கள் பந்து வீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தனர். மேலும் பந்து வீச்சாளர்கள் உண்மையில் தங்கள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
ஒரு முடிவு எங்கள் வழியில் செல்லவில்லை. ஆனால் அதற்கு நாங்கள் உண்மையில் வருத்தப்படவில்லை. அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவும் இல்லை. ஏனென்றால் நாங்கள் செய்து வரும் விஷயங்கள், திட்டமிடல் அப்படி இருந்தது என்று நினைக்கிறேன். இன்று அது பலனளித்தது” என்று கூறினார்.