ஜெய்ஸ்வால் அபார சதம்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.;
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அபாரமாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 75 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி கை கோர்த்தார்.
விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்ட இந்த ஜோடி விரைவாக இந்திய அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட இவர்கள் ரசிகர்களை குஷிபடுத்தினர்.
அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்தார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு இந்திய அணியை எந்த விதத்திலும் அச்சுறுத்தவில்லை.
வெறும் 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 271 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், விராட் கோலி 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மகராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.