சர்வதேச டி20 கிரிக்கெட்: ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடித்த பாபர் அசாம்
இந்த பட்டியலில் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளார்.;
image courtesy:PTI
லாகூர்,
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. 19.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்கா 110 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பிரெவிஸ் 25 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் பஹீம் அஷ்ரப் 4 விக்கெட்டுகளும், சல்மான் மிர்சா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சைம் அயூப் 71 ரன்களுடனும், பாபர் அசாம் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் பாபர் அசாம் அடித்த 11 ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் இதுவரை 4,234 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் (4,231 ரன்கள்) மாபெரும் சாதனையை முறியடித்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 4,188 ரன்களுடன் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளார்.