ஐ.பி.எல்: மீண்டும் கம்பேக் கொடுக்கும் யுவராஜ் சிங்..?
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் அணியை வலுப்படுத்தும் நோக்கில் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.;
image courtesy:PTI
மும்பை,
ஐ.பி.எல்.தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான (2026) பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.
பல அணி நிர்வாங்கள் தங்களது பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களை மாற்ற பரீசிலித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்றவாறே பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அத்துடன் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றவும் அணி நிர்வாகங்கள் முயற்சித்து வருவதும் தெரிகிறது.
இந்த சீசனில் ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இதனால் அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா அணியை வலுப்படுத்தும் நோக்கில் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கரை மாற்ற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி லக்னோ அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கை நியமிக்க அவருடன் சஞ்சீவ் கோயங்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங் கடந்த 2019-ம் ஆண்டுடன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார். அந்த சூழலில் அவர் தலைமை பயிற்சியாளராக ஐ.பி.எல். தொடருக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.