ஜடேஜா அப்படி கொண்டாடும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.. ஏனெனில்.. - ஆஸி.முன்னாள் வீரர் எச்சரிக்கை

ஜடேஜா சதம் அடித்தால் பேட்டை வாளைப் போல சுழற்றி கொண்டாடுவார்.;

Update:2025-08-17 22:47 IST

image courtesy:PTI

சிட்னி,

இந்தியா-இங்கிலாந்து இடையே 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்த தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இம்முறை பந்துவீச்சை விட பேட்டிங்கில் ஜொலித்தார். மொத்தம் 516 ரன்கள் குவித்த அவர் இந்த தொடரில் அதிக ரன் அடித்த 4-வது வீரராக சாதனை படைத்தார்.

முன்னதாக போட்டிகளில் சதம் அடித்துவிட்டால் வித்தியாசமாக பேட்டை வாளைப் போல சுழற்றி கொண்டாடுவார் (ஸ்வார்டு செலிபிரேஷன்). இதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா வாளைப் போல பேட்டை சுற்றி கொண்டாடும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ஏனெனில் அப்படி செய்யும்போது காயமடைந்து சில போட்டிகளைத் தவற விட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ஜடேஜாவைப் பொறுத்தவரை, அவர் காயம் அடைவதை நான் பார்க்கும் ஒரே வழி, வாள் கொண்டாட்டம் செய்யும்போது மட்டுமே. ஆனால் எனக்கு அது மிகவும் பிடிக்கும். இருப்பினும் உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள். அதிகமாக கொண்டாடாதீர்கள். அவர் ஏற்கனவே தனது நாட்டிற்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்,

மேலும் அவர் அந்த மாயாஜால 100 போட்டிகளை தாண்டிச் செல்வார் என்று நான் நம்புகிறேன். என்னை பொறுத்தவரை தங்கள் நாட்டிற்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய எவரும் ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார். அதே போல ஜடேஜா இன்னும் 2 வருடங்களில் மேற்கொண்டு 15 போட்டிகளில் விளையாடி 100 போட்டிகளைத் தாண்டி செல்வார் என்று நினைக்கிறேன்" என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்