3-வது, 4-வது டெஸ்டில் குல்தீப் யாதவ் விளையாடி இருக்க வேண்டும் - கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.;

Update:2025-08-01 07:00 IST

image courtesy:PTI

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மான்செஸ்டர் (4-வது டெஸ்ட்), லண்டன் லார்ட்சில் (3-வது டெஸ்ட்) நடந்த டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாடி இருக்க வேண்டும். ஏனெனில் தரமான சுழற்பந்து வீச்சு இல்லாமல் டெஸ்ட் போட்டியின் 4-வது, 5-வது நாளில் ஒரு அணியை வீழ்த்துவது கடினம்.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது என்ன நடந்தது என்பதை பார்த்தோம். இங்கிலாந்து அணியிடம் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததால் 20 விக்கெட்டுகளையும் எடுக்க முடியவில்லை. கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, இலங்கையின் முரளிதரன், இங்கிலாந்தின் ஸ்வான், மான்டி பனேசர், இந்தியாவின் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், அஸ்வின் என அற்புதமான சுழற்பந்து வீச்சாளர்களை சிறந்த அணிகள் கொண்டிருந்தன.

எனவே குல்தீப் யாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும். அவர் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு முக்கியமானவர். லண்டன் ஓவலில் தொடங்கியுள்ள கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர்கூட இல்லாமல் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது.

ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருப்பதால் அவர்கள் அவ்வாறு அணியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்திய அணியும் 3-வது சுழற்பந்து வீச்சாளரை எடுக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அணியில் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்