கடைசி டி20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
ஜேக்கப் டபி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.;
image courtesy:ICC
டுனெடின்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் இவ்விரு அணிகள் இடையே தொடர் நடைபெறுகிறது.
அதன்படி நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 2-1 (ஒரு போட்டி மழையால் ரத்து) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்க நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே - டிம் ராபின்சன் களமிறங்கினர். இவர்களில் கான்வே நிதானமாக ஆட ராபின்சன் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 24 பந்துகளில் 45 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா தனது பங்குக்கு 21 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார்.
வெறும் 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
கான்வே 47 ரன்களுடனும், மார்க் சாப்மேன் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஜேக்கப் டபி வென்றார்.