ஐசிசி மகளிர் உலக கோப்பை: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா

அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் தென் ஆப்பிரிக்காவும் மோதின.;

Update:2025-10-29 18:29 IST

Image Courtesy: @BCCI

கவுகாத்தி,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடந்து வரும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் களம் இறங்கினர். இதில் லாரா வோல்வார்ட் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன், சுனே லூஸ் 1 ரன், மரிசான் கேப் 42 ரன், சினாலோ ஜாப்டா 1 ரன், அன்னெரி டெர்க்சென் 4 ரன் அன்னெக்கே போஸ்ஷ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து சோலே டிரையன் களம் புகுந்தார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய வோல்வார்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 143 பந்தில் 169 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 319 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக வோல்வார்ட் 169 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 320 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடியது. 

இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 42.3 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்