விக்கெட் வீழ்த்தி தியாகோ ஜோட்டாவுக்கு அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்.. லார்ட்சில் நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ வைரல்

போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான தியாகோ ஜோட்டா சமீபத்தில் கார் விபத்தில் பலியானார்.;

Update:2025-07-11 19:33 IST

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பரான ஜேமி சுமித்தின் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார். விக்கெட் வீழ்த்தியதை சமீபத்தில் கார் விபத்தில் பலியான போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் தியாகோ ஜோட்டா கோல் அடித்ததும் கொண்டாடுவது போல் முகமது சிராஜ் செய்தார். அத்துடன் தியாகோ ஜோட்டாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வானத்தை நோக்கி காண்பித்தார்.

இது லார்ட்சில் இருந்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் சிராஜின் இந்த செயலை பதிவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்