கோலி,பண்ட் இல்லை.. நீங்கள் எதிர்கொண்ட கடினமான இந்திய பேட்ஸ்மேன் யார்..? மார்க் வுட் பதில்
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மார்க் வுட்டிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.;
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட். அந்த அணிக்காக 37 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய அவர் எதிர்வரும் ஆஷஸ் தொடருக்கு திரும்புவதை இலக்காக கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் உங்கள் கெரியரில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான இந்திய பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மார்க் வுட், “ரோகித் சர்மாவே நான் பந்து வீசியதில் மிகக்கடினமான இந்திய பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஷார்ட் பாலுக்கு எதிராக அவர் மிகச்சிறப்பாக செயல்படக்கூடியவர். அவரிடம் ஷார்ட் பால்களை வீசினால் வெகு எளிதாக சிக்சர்களை விளாசி விடுவார். எனவே அவர்தான் நான் பந்துவீசியதில் கடினமான இந்திய பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன்.
கோலி, ஒரு அற்புதமான போட்டியாளர். ஏனெனில் நம்ப முடியாத பேட்ஸ்மேனான அவர் தன்னுள் மிகச்சிறப்பான பேட்டிங் டெக்னிக்கை வைத்திருப்பவர். இருப்பினும் 4 அல்லது 5-வது ஸ்டம்ப் லைனில் பந்து வீசினால் அவரது விக்கெட்டை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறேன். ஆனால், செட்டிலாகிவிட்டால் அவரை அவுட்டாக்குவது மிகவும் கடினம்” என்று கூறினார்.