ஓவல் டெஸ்ட்: கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது - மைக்கேல் வாகன்
ஹாரி புரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.;
Image Courtesy: @ICC
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
கடைசி நாளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. கைவம் 4 விக்கெட்டுகள் இருந்தும், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன்செய்த நிலையில், ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது,
பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்திருந்தால், கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருப்பார். ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அச்சமடைந்துவிட்டது.
இங்கிலாந்து அணிக்கு ஒரே ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவைப்பட்டது. பயத்தினால் அதிரடியாக விளையாட முயன்று தோல்வியடைந்துவிட்டனர். ஹாரி புரூக்கின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய சவாலானதாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.