2வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்
முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.;
ராவல்பிண்டி,
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 11ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
முன்னதாக இந்த போட்டி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று விளையாட இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தானும், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இலங்கையும் களமிறங்க உள்ளன. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.