பிரேவிஸ் அதிரடி.. குஜராத் அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்கு

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி வீரர் கான்வே, தனது அரை சதத்தை பதிவு செய்தார்.;

Update:2025-05-25 17:18 IST

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதன்படி முதலாவதாக அகமதாபாத்தில் நடைபெற உள்ள 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் சார்பில் முதலாவதாக ஆயூஷ் மாத்ரே மற்றும் தேவோன் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் ஆயூஷ் மாத்ரே, குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த சூழலில் ஆயூஷ் மாத்ரே 34 (17) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய உர்வில் பட்டேலும் அதிரடியில் இறங்கினார். அவர் 19 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷிவம் துபே 17 (8) ரன்களில் கேட்ச் ஆனார்.

 

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே, தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 52 (35) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக பிராவிசுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்து மிரட்டிய இந்த ஜோடியில் பிரேவிஸ் 19 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். கடைசி ஓவரில் பிரேவிஸ் 57 (23) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முடிவில் ஜடேஜா 21 (18) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ரஷித் கான், ஷாருக் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்