மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்ப தயார் - ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி அறிவிப்பு
ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் 11 வருடங்கள் விளையாடி உள்ளார்.;
image courtesy:PTI
கேப்டவுன்,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.
ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் 17 ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட வெல்லாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக அனில் கும்ப்ளே, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில், டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான் வீரர்கள் விளையாடியும் அந்த அணியால் 17 ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இதனால் பல விமர்சனங்களை அந்த அணி மட்டுமின்றி ரசிகர்களும் அடைந்தனர்.
இவை அனைத்திற்கும் 18-வது சீசனோடு ஆர்சிபி அணி கோப்பையை வென்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அத்துடன் கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை களத்திற்கு அழைத்த விராட் கோலி கோப்பையை கையில் கொடுத்து வெற்றியை சேர்ந்து கொண்டாடினார். அந்த அளவுக்கு ஏபி டி வில்லியர்ஸ், ஆர்சிபி அணியின் ஒர் அங்கமாக உள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் 11 வருடங்கள் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் ஓய்வு பெற்றாலும் தம்முடைய இதயம் ஆர்சிபி அணி உடன் இருப்பதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். எனவே வருங்காலத்தில் அந்த அணியுடன் மீண்டும் இணைந்து பயிற்சியாளர், ஆலோசகர் போன்ற ஏதேனும் வேலை செய்து வெற்றிகளில் பங்காற்றத் தயாராக இருப்பதாக அவர் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நான் எதிர்காலத்தில் ஐபிஎல்-லில் வேறு பாத்திரத்தில் (வீரராக அல்ல) ஈடுபடலாம். ஆனால் ஆனால் ஒரு தொடர் முழுவதும் பொறுப்பை ஏற்பது மிகவும் கடினம். என் இதயம் எப்போதும் ஆர்சிபி-யுடன் உள்ளது. எனவே, ஒருவேளை ஆர்சிபி அணி எனக்கு அங்கே ஏதேனும் ஒரு வேலை (பயிற்சியாளர் அல்லது ஆலோசகர்) இருக்கிறது என்று உணர்ந்தால், என்னுடைய நேரம் சரியாக இருந்தால், அதை நான் செய்யத் தயார். அதற்கு நிச்சயமாக நான் ஆர்சிபி அணியில் இருப்பேன்” என்று கூறினார்.