பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி... பந்துவீச்சாளர்களை பாராட்டிய ஷாய் ஹோப்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.;
Image Courtesy: @windiescricket
புளோரிடா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 40 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. ஹோல்டர் 16 ரன்களுடனும், ஷமர் ஜோசப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆல் ரவுண்டராக ஜொலித்த ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், 2வது போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதலில் ஆட்டத்தை அமைத்துக் கொடுத்த பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகள். பிட்ச் கொஞ்சம் சவாலானதாக இருந்தது.
பேட்ஸ்மேன்களுக்கு சேசிங் செய்ய வாய்ப்பு அளித்த பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகள். நாங்கள் எப்போதும் எங்கள் திறமைகளை மேம்படுத்தவும், ஒரு அணியாக சிறந்து விளங்கவும் முயற்சி செய்கிறோம். வீரர்கள் நிறைய கடின உழைப்பை செலுத்தி வருகின்றனர்.
நடுப்பகுதியில் அதிக சிங்கிள்களைப் பெறுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் பவுண்டரி அடிக்கும் அணியாக இருக்கிறோம், அதற்கு நாங்கள் பெயர் பெற்றவர்கள். ஆனால் பிட்ச் சாதகமாக இல்லாதபோது, சிங்கிள்களை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.