சுப்மன் கில் இரட்டை சதம்.. இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்களில் ஆல் அவுட்

இங்கிலாந்து - இந்தியா 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.;

Update:2025-07-03 21:14 IST

image courtesy:BCCI

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பணிச்சுமையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் 3-வது டெஸ்டில் ஆடுவார் என கேப்டன் கில் தெரிவித்தார். அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் வாய்ப்பு பெற்றார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், பஷீர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த சுப்மன் கில் - ரவீந்திர ஜடேஜா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்த இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா அரைசதமும், சுப்மன் கில் 150 ரன்களையும் கடந்து சிறப்பாக பேட்டிங் செய்தனர். இங்கிலாந்து பந்துவீச்சுக்கு தண்ணி காட்டிய இந்த ஜோடி 204 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து சுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் கைகோர்த்தார். சுந்தரின் ஒத்துழைப்புடன் இரட்டை சதத்தை கடந்த சுப்மன் கில் தொடர்ந்து பேட்டிங் செய்தார். வாஷிங்டன் சுந்தர் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பொறுமையாக விளையாடிய அவர் 103 பந்துகளில் 42 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனிடையே சுப்மன் கில் 250 ரன்கள் அடித்தார். சுந்தர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில்லும் 269 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கேப்டன் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

பின்னர் களமிறங்கிய ஆகாஷ் தீப் 6 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த முகமது சிராஜ் 8 ரன்களிலும் (23 பந்துகள்) ஆட்டமிழந்தனர். முடிவில் 151 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷீர் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் மற்றும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்