வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.;
image courtesy: @ICC
லண்டன்,
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி. கோப்பை ஒன்றை தென் ஆப்பிரிக்க அணி வென்றுள்ளது.
இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருது (0 ரன், 136 ரன்) மார்க்ரமுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. ஸ்டார்க் வீசிய பந்தை தென் ஆப்பிக்க கேப்டன் பவுமா விளாச முற்பட்டார். அப்போது, அந்த பந்து ஸ்லிப்பில் கேட்ச் நோக்கி சென்றது. ஸ்லிப்பாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்ட நிலையில் அவர் அந்த கேட்சை பிடிக்க முயன்றார்.
ஆனால், பந்து ஸ்மித்தின் வலது கையில் வேகமாக பட்டு கீழே விழுந்தது. இதில், ஸ்மித்தின் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக சாம் கொன்ஸ்டாஸ் களத்திற்கு வந்தார்.
ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஏற்பட்ட காயம் குணமாக சுமார் 6 மாத காலம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர் தவறவிட உள்ளதாக கூறப்படுகிறது.