இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; நிதிஷ்குமார் விலகல் - பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்த நிலையில் 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அத்துடன் இதுவரை களம் இறங்காத மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் பயிற்சியின் போது இடது கையில் காயம் அடைந்தார். மேலும், ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும் காயத்தை சந்தித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்கள் அடுத்த ஆட்டத்துக்கு முன்பாக முழு உடல் தகுதியை எட்டுவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நிதிஷ்குமார் ரெட்டி விலகி உள்ளதாகவும், 4வது போட்டியில் இருந்து அர்ஷ்தீப் சிங் விலகி உள்ளதாகவும் பி.சி.சி.ஐ. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்திய அணியில் அரியானாவை சேர்ந்த 24 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான அன்ஜுல் கம்போஜை சேர்த்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அன்ஜுல் கம்போஜ் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து லயன் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் இடம் பிடித்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
மேலும் அவர் கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் அள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.