தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

சதமடிக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோது தினேஷ் கார்த்திக் தன்னம்பிக்கையை கொடுத்ததாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-24 09:23 GMT

image courtesy: twitter/@RCBTweets

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ராஜஸ்தானுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் அடைந்த தோல்வியுடன் ஐ.பி.எல்.-ல் இருந்து ஓய்வு பெற்றார். மைதானத்தில் ரசிகர்களை நோக்கி கையுறையை உயர்த்தி காட்டியபடி வெளியேறிய அவருக்கு விராட் கோலி உள்ளிட்ட சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை அளித்தனர்.

இந்நிலையில் 2019- க்கு பின் சதமடிக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோது 2022 சீசனில் தினேஷ் கார்த்திக் தன்னம்பிக்கையை கொடுத்ததாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக் பற்றிய தனது நினைவுகள் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 சாம்பியன்ஸ் டிராபியில் அவரை முதல் முறையாக பார்த்தது நினைவிருக்கிறது. முதல் முறையாக உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டபோது தினேஷ் கார்த்திக் மிகவும் வேடிக்கையானவராக இருப்பதை கண்டேன். அவர் அதிக சுறுசுறுப்பான நபர் என்று நான் சொல்வேன்.

அற்புதமான திறமை கொண்ட பேட்ஸ்மேனான அவர் இப்போதும் அப்படியே இருக்கிறார். களத்திற்கு வெளியே அவரிடம் நான் சில சுவாரஸ்யமான உரையாடல்களை கொண்டுள்ளேன். கிரிக்கெட்டை தாண்டி அவருக்கு பல்வேறு விஷயங்களில் நிறைய அறிவு இருக்கிறது.

2022-ல் எனக்கு ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையாதபோது தன்னம்பிக்கையின்றி தடுமாறிக் கொண்டிருந்தேன். அப்போது சில நேரங்களில் என்னுடன் உட்கார்ந்த அவர் அறிவுரைகள் மூலம் அதிக தன்னம்பிக்கையை கொடுத்தார். அவர் தாம் நினைக்கும் விஷயங்களை தைரியமாக வெளிப்படையாக யாரிடம் வேண்டுமானாலும் பேசுவார். அதுவே அவரிடம் எனக்கு பிடித்த ஒரு விஷயம் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்