சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்று நம்புகிறோம் - ஸ்டீவ் ஸ்மித்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.;
Image Courtesy: @ICC
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இப்போட்டிக்கு முன்னதாக இதில் வெற்றி பெற்று நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவது குறித்து அதிகம் ஆலோசித்தோம். அதற்கேற்றவாறு எங்கள் அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை கட்டுப்படுத்தினர். அவர்களை 270 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது நல்லது. பேட்டிங்கிலும் நாங்கள் அதிரடியாக தொடங்கினோம். இது ஒரு நல்ல செயல்திறன்.
ஆனால், இப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. இன்றைய (நேற்று) ஆட்டத்தில் மேத்யூ ஷார்ட் விளையாட கொஞ்சம் சிரமப்பட்டார். இருப்பினும் சில நாள்களுக்குள் அவர் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். மறுபக்கம் டிராவிஸ் ஹெட் எப்போதும் போல் நன்றாக பேட்டிங் செய்து ஆரம்பம் முதலே அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அரையிறுதியிலும் அவரால் மீண்டும் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். வீரர்கள் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். எனவே, இந்த தொடரில் நாங்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.