ரிஷப் பண்ட் மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்..? அஜித் அகர்கர் கொடுத்த முக்கிய அப்டேட்
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.;
image courtesy:PTI
மும்பை,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று துபாயில் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் கேப்டனாக நீடிக்கிறார். இதில் அனைவரும் நினைத்தது போலவே விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை.
கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது கால் பாதத்தில் பந்து தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்ட விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. இதன் காரணமாக அவரது பெயர் அணி தேர்வில் பரிசீலனை செய்யப்படவில்லை. விக்கெட் கீப்பர்களாக துருவ் ஜூரெல், தமிழகத்தை சேர்ந்த என்.ஜெகதீசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் மீண்டும் களத்திற்கு திரும்புவது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அகர்கர், “ரிஷப் பண்ட் அணியின் முக்கியமான வீரர். துரதிர்ஷ்டவசமாக இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர் நவம்பரில் சொந்த மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராக இருப்பார் என்று நம்புகிறேன்” என கூறினார்.