7-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கியது ஏன்...? - ரிஷப் பண்ட் விளக்கம்
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வி கண்டது.;
Image Courtesy: @IPL
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 52 ரன் எடுத்தார்.
டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது முகேஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த போட்டியில் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட நேற்று 7வது இடத்தில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த போட்டியில் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது ஏன்? என்பது குறித்து ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டது, அந்த சூழலை சாதகமாக்க எடுக்கப்பட்ட முயற்சிதான். இதுபோன்ற ஒரு பிட்சில் அப்துல் சமத்தால் ரன்கள் குவிக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால், மில்லர் களமிறங்கிய பின், லக்னோ அணி ஒரு மாதிரி சிக்கிக் கொண்டது. இதுபோன்ற சில விஷயங்களில் சரியாக செயல்பட வேண்டும்.
அடுத்தடுத்து எங்களின் காம்பினேஷனில் சரியாக இருக்க வேண்டும். இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனியை களமிறக்குவதற்கு காரணம் மயங்க் யாதவ் தான். ஒருவேளை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒருவர் 20 ஓவர்களும் ஆடினால், எங்களால் மயங்க் யாதவை அணிக்குள் கொண்டு வர முடியும். அவரை எப்படி பிளேயிங் லெவனுக்குள் பொருத்துவது என்பதை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.