மகளிர் உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 198 ரன்கள் அடித்தது.;

Update:2025-10-16 22:56 IST

விசாகப்பட்டினம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் இன்று அரங்கேறிய 17-வது லீக்கில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோபனா மோஸ்டரி 66 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், அன்னாபெல் சதர்லேண்ட், அலனா கிங் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்பீல்ட் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

வெறும் 24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அலிசா ஹீலி 113 ரன்களுடனும், போப் லிட்ச்பீல்ட் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அலனா கிங் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 9 புள்ளிகள் (ஒரு போட்டி முடிவில்லை) பெற்ற நிலையில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்