மகளிர் உலகக்கோப்பை: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா..? - ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.;

Update:2025-10-12 06:30 IST

Image Courtesy: @BCCIWomen

விசாகப்பட்டினம்,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து புரட்டியெடுத்தது.

முந்தைய ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் போராடி வீழ்ந்தது. இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும். 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

அடுத்து நடக்க இருந்த இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கடந்த ஆட்டத்தில் 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆவலுடன் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 59 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 48 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், 11 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்