புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் விலகல்
12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.;
Image Courtesy: File Image / X (Twitter)
ஜெய்ப்பூர்,
12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இதுவரை 28 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் கட்ட ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. அடுத்த கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. தமிழ் தலைவாஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு நட்சத்திர வீரரான பவன் ஷெராவத் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மேலும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியில் இருந்து பவன் ஷெராவத் திடீரென்று வெளியேறி உள்ளார். அணியின் ஜெய்ப்பூர் சுற்றுப்போட்டிக்கான பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
யாரிடமும் தெரிவிக்காமல் பவன் ஷெராவத் அணியின் முகாமில் இருந்து வெளியேறி சென்றதாக கூறப்படுகிறது. அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. தற்போதைய சீசனில் பவன் ஷெராவத் 3 போட்டிகளில் 22 புள்ளிகள் எடுத்தார். அவரது திடீர் விலகல் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
புரோ கபடி லீக் வரலாற்றில் அதிக ரெய்டு புள்ளிகள் பெற்றவர்களில் ஒருவராக பவன் ஷெராவத் திகழ்கிறார். இதுவரை 1340 ரெய்டு புள்ளிகள் குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழ் தலைவாஸ் அணியில் தொடருவாரா? அல்லது விலகுவாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. தமிழ் தலைவாஸ் அணி இன்று இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் அணியுடன் மோதுகிறது.
இதில் பவன் ஷெராவத் பங்கேற்க மாட்டார் என்பதால் துணை கேப்டனான அர்ஜுன் தேஷ்வால் கேப்டனாக செயல்படுவார். பவன் ஷெராவத்தை அணிக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.