மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டி: கோனெரு ஹம்பி - திவ்யா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
பதுமி,
3-வது 'பிடே' மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. 107 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த செஸ் திருவிழாவில், இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளனர். திவ்யா அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டான் ஜோங்யியை விரட்டியடித்தார். கோனெரு ஹம்பி, மற்றொரு சீன வீராங்கனை லீ டிங்ஜியை டைபிரேக்கரில் தோற்கடித்தார்.
இந்த நிலையில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் கோனெரு ஹம்பி, 18-ம் நிலை வீராங்கனையான திவ்யா தேஷ்முக்கை இன்று எதிர்கொள்கிறார். யார் வெற்றி பெற்றாலும் முதல்முறையாக இந்தியாவுக்கு மகளிர் உலகக் கோப்பை கிடைக்க இருப்பது பெருமையாகும்.
இறுதி சுற்று இரு ஆட்டங்களை கொண்டது. இதன் முதலாவது ஆட்டம் இன்றும், 2-வது ஆட்டம் நாளையும் கிளாசிக்கல் முறையில் நடைபெறுகிறது. இதில் முதல் 40 நகர்வுகளுக்கு 90 நிமிடமும், அதன் பிறகு எஞ்சிய போட்டிக்கு 30 நிமிடங்களும், மேலும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 30 வினாடிகளும் வழங்கப்படும். போட்டி 5 மணி நேரத்திற்கு மேல் நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இரு ஆட்டத்தின் முடிவில் சமநிலை ஏற்பட்டால் ஆட்டம் டைபிரேக்கருக்கு செல்லும்.
28-ந்தேதி நடைபெறும் டைபிரேக்கரில் அதிவேகமாக காய்களை நகர்த்தும் முறை கடைபிடிக்கப்படும். டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் மோத வேண்டும். அதிலும் சமநிலை நீடித்தால் தொடர்ந்து மேலும் இரு வாய்ப்புகள் வீதம் வழங்கப்படும். இதன் அடிப்படையில் முடிவு காணப்படும். பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.43¼ லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் வீராங்கனைக்கு ரூ.30¼ லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.