துலாம்: புத்தாண்டு ராசிபலன் 2026: சிக்கல்கள், போட்டிகள் இருந்தாலும்.. இறுதியில் உங்களுக்கு தான் வெற்றி..!


துலாம்: புத்தாண்டு ராசிபலன் 2026: சிக்கல்கள், போட்டிகள் இருந்தாலும்.. இறுதியில் உங்களுக்கு தான் வெற்றி..!
x
தினத்தந்தி 21 Dec 2025 12:39 PM IST (Updated: 21 Dec 2025 1:49 PM IST)
t-max-icont-min-icon

அரசியல், பொழுதுபோக்கு, கூட்டுத் தொழில் ஆகியவற்றில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.

துலாம்


துலாம் ராசியினருக்கு இந்த ஆங்கில புத்தாண்டு திறமையை வெளிப்படுத்தும் காலகட்டமாக அமைகிறது. ஆண்டின் பிற்பகுதியில் 10-ம் இடத்துக்கு மாறும் குரு, உச்ச நிலை அடைவதால் உங்களுடைய திறமை தெரிய வேண்டிய இடத்திற்கு தெரியும். பொறுப்புகளும், உழைப்பும் அதிகரிக்கும். அத்துடன் சிக்கல்களும், போட்டிகளும் உங்களுடைய திறமைக்கு சவாலாக அமையும். இறுதி வெற்றி உங்களுக்கு தான் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல்கள் ஏற்பட்டு விலகும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் தலைமை பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். கருத்து ரீதியாக மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்படும். வம்பு வழக்குகளில் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.

குடும்பம், நிதிநிலை

குடும்பம் மற்றும் கணவன், மனைவி உறவுகளில் உள்ள சிக்கல்கள் இந்த ஆண்டு நல்ல விதமாக தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்விச் செலவுகள் அதிகரிக்கும். தொலைதூர உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய சொந்தம் ஒன்று உங்கள் வீடு தேடி வரும்.

முதல் நான்கு மாதங்கள் நிதி நிலையில் சிக்கல்களும், அதன் பிறகு பல்வேறு வரவுகளும் ஏற்படும். வருமானம் அதிகரிப்பதால் பழைய கடன்கள் தீரும். வண்டி வாகனச் சேர்க்கை, சொத்துச் சேர்க்கை ஆகிய சுப விரயங்கள் இந்த ஆண்டு உண்டு. புதிய தொழில் அல்லது முதலீடுகள் மூலம் உங்களுடைய சொத்து மதிப்பு உயரும். ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.

தொழில், உத்தியோகம்

சட்டம், நீதி, அரசியல், பொழுதுபோக்கு, கூட்டுத் தொழில் ஆகியவற்றில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். நீண்ட காலமாக தொழில் தொடங்க திட்டமிட்டவர்களுக்கு இது நல்ல காலம். தொழில் கூட்டாளிகள் தாமாக வந்து இணைவார்கள். உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடும் முன்னதாக அதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடங்களில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். இருக்கும் வேலையை விட்டு விலகும் எண்ணத்தை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். பணியிடத்தில் மன அமைதி இல்லாத நிலையில் ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும். நல்ல நேரம் கூடிவரும் நேரத்தில் அவசரப்படக்கூடாது. வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

கலை, கல்வி

கலைத்துறையினர், இசைத்துறையினர், சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையினருக்கு இந்த ஆண்டு நல்ல பெயரை பெற்று தரும். மற்றவர்களுடைய புதிய கலைப்படைப்புகளை நீங்கள் வெளியிடுவதன் மூலம் உங்கள் நிறுவனத்திற்கு நல்ல மதிப்பு கிடைக்கும். இசைத்துறையினர் வெளிநாடுகளில் தங்களுடைய திறமைகளை காண்பித்து புகழ் பெறுவார்கள்.

போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு வெற்றி உறுதி. ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் வெளிநாட்டு கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அதற்கு வருடத்தின் பிற்பகுதி தான் சாதகமாக உள்ளது. மாணவர்களுக்கு நேர மேலாண்மை இந்த வருடம் முக்கியம்.

நன்மைகள் நாடி வர..

உடல் நலனில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு சிகிச்சையால் சரியாகும். இருந்தாலும் அவ்வப்பொழுது தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடல்நலம் மேம்படும். தினசரி நடை பயிற்சி, தியானம் ஆகியவை மிக முக்கியம்.

தினமும் சுத்தமான ஆடைகளை அணிவதுடன், வாசனை திரவியங்களை பயன்படுத்துவதும் நல்லது. முடிந்தவரை வெள்ளை நிற ஆடைகளை அதிகமாக அணிவது, வெள்ளை நிற மலர்கள் மற்றும் பசும்பால் ஆகியவற்றை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு வழங்குவதும் பல நன்மைகளை தரும். கோவில் பணியாளர்கள், அறக்கட்டளை ஊழியர்கள், அனாதை இல்ல பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்

1 More update

Next Story