துலாம் - தமிழ் மாத ஜோதிடம்


துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Aug 2022 6:22 PM IST (Updated: 16 Aug 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை

அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் துலாம் ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அர்த்தாஷ்டமச் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதிர்பார்ப்புகள் ஓரளவே நிறைவேறும்.

சிம்ம - சூரியன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில், மாதம் முழுவதும் சூரியன் சஞ்சரிக்கிறார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஓரளவு நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பயணங்களால் பலன் உண்டு. பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கன்னி - புதன் சஞ்சாரம்

ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானாதிபதி உச்சம் பெறுவதால் விரயங்கள் அதிகரிக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளுக்கு கொடுத்து உதவுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும்.

வக்ர புதன் சஞ்சாரம்

ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். விரயாதிபதி வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் இருப்பதால், தர்ம காரியங்களுக்கு செலவிடுவீர்கள். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு குறையும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்தில் லாபாதிபதி சூரியனோடு இணைவதால் பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணம் அதிகரிக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் நாடிவரும் நேரம் இது. உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரலாம்.

குரு வக்ரமும், சனி வக்ரமும்

மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ரமாக உள்ளனர். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது யோகம்தான். புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்தவர்களுக்கு பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். சனியின் வக்ரத்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும். விரயங்கள் குறையும். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தொழில் வளம் சிறக்கும். பிள்ளைகளின் திருமணத்தை நடத்திப் பார்ப்பீர்கள்.

இந்த மாதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 23, 24, 27, 28, செப்டம்பர்: 2, 3, 4, 8, 9

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

பெண்களுக்கான பலன்கள்

குரு மற்றும் சனியின் வக்ர இயக்கம் உங்களுக்கு நன்மையைத் தரும். எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். பொருளாதார நிலை உயரும். கணவன் -மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் படிப்பு மற்றும் சுபகாரியம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், இன்னும் பிற சலுகைகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் நிதானமாகச் செய்வதன் மூலம் வெற்றி வந்துசேரும்.


Next Story