துலாம் - தமிழ் மாத ஜோதிடம்


துலாம் - தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 10 May 2022 3:01 PM GMT (Updated: 2022-05-10T20:33:04+05:30)

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை


அன்பாகப் பேசி அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் துலாம் ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் 'விபரீத ராஜயோகம்' அடிப்படையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மீன - செவ்வாய் சஞ்சாரம்

வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், 6-ம் இடத்திற்கு செல்லும்பொழுது சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மருத்துவம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மகத்தான பலன் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.

சனி - செவ்வாய் பார்வைக் காலம்

வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் இருக்கும் சனி பார்க்கப்போகிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், தன -சப்தமாதிபதி செவ்வாயைப் பார்க்கும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாகும் பொழுது வாகன யோகம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நல்ல நேரம்தான். சுப காரியம் நடை பெறுவதற்கான அறிகுறி தென்படும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.

மகரச் சனியின் வக்ர காலம்

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. சுகக்கேடு அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். இதுபோன்ற காலங்களில் முறையான வழிபாடு அவசியம். வீண் விரயங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி நிலவும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

இம்மாதம் பட்டாபிஷேக ராமர் படத்தை இல்லத்தில் வைத்து வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, ஜூன்: 1, 2, 6, 7, 12, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செய்வது நல்லது. அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் பலன் தரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். பிள்ளைகளின் திருமணப் பேச்சு முடிவாகலாம். எதிர்பார்த்த சம்பள உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் கவனம் தேவை.


Next Story